ஆட்டோவில் புகை பிடித்ததற்கு எதிர்ப்பு; ரத்தம் வர பெண்ணுக்கு அடி, உதை
ஷேர் ஆட்டோவில் புகை பிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை, ரத்தம் வர அடித்து, திட்டிய வங்கி உயரதிகாரி கைது செய்யப்பட்டார்.
குருகிராம்,
அரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் சுமன் லதா (வயது 42). இவர் ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோ கிரீன்உட் சிட்டி பகுதிக்கு வந்தபோது, ஒரு தம்பதி ஆட்டோவில் ஏறியுள்ளது.
அவர்களில், வசு சிங் என்பவர் சிகரெட் புகைத்தபடி இருந்துள்ளார். அதனை நிறுத்தும்படி அந்த பெண் கூறியுள்ளார். தனியார் வங்கி ஒன்றில் உயரதிகாரியாக உள்ள அந்த நபர், இதனால் ஆத்திரமடைந்து மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இதன்பின், அவரது வாயில் இருந்த சிகரெட்டை பிடுங்கி, அந்த பெண் வெளியே எறிந்து உள்ளார். இதில் கோபத்தில் சிங், பெண்ணின் முகத்தில் 2 முறை குத்தியுள்ளார். இதில் அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.
கீழே இறங்கிய அந்த பெண் போலீசாருக்கும், தனது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்து உள்ளார். இதன்பின் போலீசார் சிங்கை கைது செய்தனர். எனினும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார்.