லக்கிம்பூர் விவகாரம்: மத்திய மந்திரி மகனுக்கு ஜாமீன்
உத்தரபிரதேசத்தில் தேர்தல் தொடங்கிய நிலையில்,மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ்க்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர்,நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து,மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் உயிரிழந்தனர் என்ற குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, வழக்கும் தொடுக்கப்பட்டது.மேலும்,காவலர்களும் விசாரணையை தீவிரபடுத்தினர்.
இதனைத்தொடர்ந்து,இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின்னர்,இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்சநீதிமன்றம் நியமித்தது.மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளையும் சிறப்பு புலனாய்வு குழுவுடன் சேர்த்தது.
இதனையடுத்து,லக்கிம்பூர் கெர்ரி விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும்,மாறாக எதார்த்தமாக நடந்தவை அல்ல என்றும் இதனை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்தது.
மேலும்,லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக உ.பி. மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவ இடத்தில் ஆசிஷ் மிஸ்ரா இருந்துள்ளார் என்று கூறி அவரது பெயர் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றது.
இந்நிலையில்,லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஸ் மிஸ்ராவுக்கு அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. உ.பி.யில் தேர்தல் தொடங்கிய நிலையில் மத்திய மந்திரி அஜஸ் மிஸ்ரா மகன் ஆஷீஷ்க்கு ஜாமீன் கிடைத்துள்ளது.