கர்நாடகா: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போராட்டம் நடத்த தடை
கர்நாடகாவின் பெங்களூருவில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் மற்றும் ஆர்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர்.
இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனிடையே, பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியது. ஒரு சில இடங்களில் மோதல்களும் அரங்கேறியது. இதனால், கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த தனி நீதிபதி, வழக்கை ஐகோர்ட்டின் கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூருவில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது. ஹிஜாப் - காவித்துண்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்த 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.