மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு அருங்காட்சியகம்
மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு அவரது பிறந்த ஊரான இந்தூரில் அருங்காட்சியகம் மற்றும் அவரது பெயரில் இசைப்பள்ளி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம்,
புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6-ந்தேதி மும்பையில் மரணம் அடைந்தார். இவர் 14-க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார், 5 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் இளையராஜா இசையில் சத்யா படத்தில் இடம்பெற்ற வளையோசை கலகலவென பாடலையும் ஆனந்த் படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆராரோ பாடலையும் பாடி இருக்கிறார். இந்த பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.
மறைந்த லதா மங்கேஷ்கர் நினைவாக மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது பிறந்த ஊரான இந்தூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்து உள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய அனைத்து பாடல்கள் விவரங்கள் மற்றும் அவரது புகைப்படங்கள், வாங்கிய விருதுகள் ஆகியவை இடம்பெற உள்ளன. அத்துடன் இந்தூரில் லதா மங்கேஷ்கர் பெயரில் இசைப்பள்ளியும் அமைக்கப்பட உள்ளது.