அரசுக்கு சொந்தமான விமானத்தை சேதப்படுத்தியதற்காக விமானிக்கு ரூ.85 கோடி அபராதம்

அரசுக்கு சொந்தமான விமானத்தை சேதப்படுத்தியதற்காக விமானிக்கு ரூ.85 கோடி அபராதம்

Update: 2022-02-08 10:46 GMT
குவாலியர்

மத்தியப் பிரதேசத்திற்கு சொந்தமான பீச் கிராஃப்ட் கிங் ஏர் பி250 ஜிடி ரக விமானம் கொரோனா தொற்று பரிசோதனை கருவிகள், மருந்துகள் உள்ளிட்டவை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த விமானம் கடந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி அன்று 71 ரெம்டெசிவிர் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு அகமதாபாத்தில் இருந்து குவாலியருக்கு சென்றது.

கேப்டன் மஜித் அக்தர் விமானத்தை இயக்கினார். துணை விமானி ஷிவ் ஜெய்ஸ்வால் மற்றும் நைப் தெசில்தார் திலீப் திவேதி ஆகியோர் உடன் இருந்தனர். இதில், விமானிகள் மூன்று பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்நிலையில், அரசுக்கு சொந்தமான விமானத்தை சேதப்படுத்தியதற்காக விமானி மஜித் அக்தருக்கு ரூ.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த வாரம் விமானிக்கு அளித்த குற்றப்பத்திரிக்கையில் விபத்தின் காரணமாக சேதமடைந்த விமானத்தின் மதிப்பு ரூ.60 கோடி என்றும், போக்குவரத்துக்கு மற்ற தனியார் ஆபரேட்டர்களிடமிருந்து விமானம் வாடகைக்கு எடுக்க ரூ.25 கோடி செலவானதாகவும் குறிப்பிட்டு மஜித் அக்தருக்கு ரூ.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த மஜித் அக்தர், குவாலியர் ஓடுபதையில் தடுப்பு இருப்பது குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும் விமானம் இயக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு காப்பீடு செய்யப்படாவிட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இருப்பினும், மஜித் அக்தரின் விமானம் இயக்கும் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்து இந்திய  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்