பஞ்சாப் தேர்தல்: காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார்? ராகுல் காந்தி இன்று அறிவிக்கிறார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாபில் இன்று கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளார்.
சண்டிகர்,
177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பஞ்சாபில் நடைபெறும் மெய்நிகர் பேரணியின் போது கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக, கட்சியின் முடிவை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று தலைமைப் பதவிக்கான இரண்டு முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறினார்.
இதுதொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து தனது டுவிட்டரில் “முடிவெடுக்கும் செயலின்றி பெரிதாக எதுவும் சாதிக்கப்படவில்லை, பஞ்சாபிற்கு தெளிவுபடுத்த வரும் எங்கள் வழிகாட்டி ராகுல் ஜிக்கு அன்பான வரவேற்பு. அவருடைய முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்”என்று அதில் பதிவிட்டுள்ளார்.
Nothing great was ever achieved without an act of decision …. Warm welcome to our leading light Rahul Ji , who comes to give clarity to Punjab …. All will abide by his decision !!!
— Navjot Singh Sidhu (@sherryontopp) February 6, 2022