ஐதராபாத்தில் இன்று ராமானுஜர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
தெலுங்கானா ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
ஐதராபாத்,
ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஐதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெற்று வருகிறது.
வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும் கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகளால் பஞ்சலோகத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று சிலையை திறந்து வைத்து நாட்டுடமையாக்குகிறார். நிகழ்ச்சியின் போது, ராமானுஜரின் வாழ்க்கை பயணம் மற்றும் போதனைகள் குறித்த 3டி விளக்கக்காட்சி காட்சிப்படுத்தப்படும், மேலும் சிலையைச் சுற்றியுள்ள 108'திவ்ய தேசங்களின் மாதிரிகளை மோடி பார்வையிடுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ 1,000 கோடியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பஞ்சலோகசிலை திறக்கப்படுகிறது. வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் சிலை திறக்கப்படுகிறது.
பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு திறந்து வைக்க உள்ள ராமானுஜர் சிலை சமத்துவ சிலை என அழைக்கப்படுகிறது. சிலை திறப்பிற்கான பூஜையில் தமிழகம், கேரளா, கர்நாடக, மராட்டியம் மாநில வேத பண்டிதர்களும் பங்கேற்கின்றனர்.