7 ஆண்டுகளில் 4.28 கோடி போலி ரேஷன் கார்டுகள் ரத்து - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் 7 ஆண்டுகளில் 4.28 கோடி போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பொது வினியோக திட்டத்தை நடத்தும் பொறுப்பு மாநில அரசுகளையே சாரும். பயனாளிகளை அடையாளம் காண்பது, ரேஷன் கார்டு வழங்குவது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது ஆகியவையும் மாநில அரசின் பொறுப்பாகும்.
அத்துடன், தகுதியற்ற, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக மாநில அரசுகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளில் 4 கோடியே 28 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் ரத்து செய்துள்ளன. உத்தரபிரதேசத்தில் அதிக அளவாக 1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.