நீட் விவகாரம்: கவர்னருக்கு எதிராக மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு
நீட் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி,
நீட் விவகாரம் குறித்தும் கவர்னரின் நடவடிக்கை குறித்தும் விவாதிக்க கோரி மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். கவர்னரின் செயல் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதில் அளித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு,
கேள்வி நேரம் தேவையில்லை என்றால் கூட பரவாயில்லை. திமுக கோரிக்கையை விவாதிக்க முடியாது. தமிழக எம்பிக்களின் கோரிக்கை குறித்து தற்போது விவாதிக்க அனுமதிக்க முடியாது. கேள்வி நேரத்தில் பேச முடியாது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசுங்கள் என்றார்.
இதனையடுத்து விவாதம் நடத்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி தராததால் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, கவர்னரின் அதிகாரம் தொடர்புடைய பிரச்சினை இது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் நாளை இது போன்று நடக்கலாம். ஒரு மாநில சட்டமன்றம் அனுப்ப கூடிய மசோதாவை கவர்னர் எப்படி திருப்ப அனுப்ப முடியும் என திருச்சி சிவா எம்.பி., கேள்வி எழுப்பினார்.