ஒவைசி கார் மீது துப்பாக்கி சூடு; ஒருவர் கைது
டெல்லி திரும்பிய ஒவைசி மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் உயிர் தப்பியுள்ளார்.
காசியாபாத்,
உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மீரட் மற்றும் கிதோரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தே ஹாதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் மற்றும் ஐதராபாத் தொகுதி எம்.பி.யான ஒவைசி கலந்து கொண்டார்.
இதன்பின்னர், அவர் காரில் டெல்லி திரும்பி கொண்டு இருந்துள்ளார். அவர் ஹபுர் பகுதியில் வந்தபோது, சஜார்சி சுங்க சாவடியில் ஓவைசியின் கார் நின்றது.
அப்போது அடையாளம் தெரியாத சில நபர்கள் ஒவைசியின் கார் மீது திடீரென துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனர். இதில் காரின் டயர் பஞ்சரானது. அதிர்ஷ்டவசமாக காரில் அமர்ந்திருந்த ஓவைசி உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதன்பின்பு ஒவைசி அளித்த பேட்டியில், 4 முறை எனது வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டனர். மொத்தம் 3 முதல் 4 பேர் வரை இருந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும். என்னுடைய வாகனத்தின் டயர்கள் பஞ்சரானது. நான் வெறொரு வாகனத்தில் புறப்பட்டு சென்றேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.