பீஜிங் ஒலிம்பிக்; இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார்! சீனாவின் செயலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
இந்திய வீரர்களுடன் சண்டையில் ஈடுபட்ட சீன கமாண்டர் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 4-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் பாரம்பரிய தீப தொடர் ஓட்டத்துடன் தொடங்கியது.
இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இன்று காலை ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சண்டையில் இந்திய ராணுவ வீர்களிடம் தலையில் காயம் அடைந்த சீன ராணுவத்தின் கமாண்டர் கி பேபவோ ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்திக் கொண்டு பயணித்தார்.
இந்திய ராணுவ வீரர்களுடன் போரிட்ட சீன ராணுவ வீரர் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திக் கொண்டது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி அளிக்கும் விதமாக, குளிர்கால ஒலிம்பிக்கை ராஜாங்க ரீதியிலாக புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, "ஒலிம்பிக்கை அரசியலாக்க சீனா முடிவு செய்தது வருத்தம் அளிக்கிறது. பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார்" எனத் தெரிவித்துள்ளது.