71,000 ரூபாய் வேண்டுமா..? 10 அடி நீளமுள்ள தோசை சாப்பிட்டால் போதும்..!
டெல்லியில் உள்ள ஓட்டலில் 10 அடி நீளமுள்ள தோசை சாப்பிட்டால் 71,000 ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
டெல்லியில் உத்தம் நகரில் உள்ள சுவாமி சக்தி சாகர் என்ற ஓட்டலின் உரிமையாளரான சேகர் குமார் தோசையை வைத்து வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
10 அடி நீளமுள்ள தோசையை 40 நிமிடத்துக்குள் முழுமையாக சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டு முடித்தால் ரூ. 71,000 பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவ்வாறு தோசையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முழுமையாக சாப்பிட முடியவில்லை என்றால் தோசைக்குரிய விலையான ரூ. 1500 கொடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
வித்தியாசமாக ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்த சேகர் 10 அடி நீளமான தோசையை அறிமுகம் செய்துள்ளார். இதற்காக பிரத்யேகமாக சேகர் குமார் தோசைக்கல் செய்யும் இடத்திற்கு சென்று 10 அடி நீளமுள்ள தோசைக்கல்லை வாங்கியுள்ளார்.
இந்தப் போட்டியில் வெல்வது அவ்வளவு எளிதல்ல. இதுவரை இந்த போட்டியில் 25 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் வெற்றி பெறவில்லை. கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களது அனுபவங்களை சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களாக பகிர்ந்து வருகின்றனர்.