கல்வான் மோதல்: சீன வீரர்களின் உயிரிழப்பு அதிகம் - புதிய தகவல்

கல்வான் மோதலில் சீன தரப்பில் வீரர்களின் உயிரிழப்பு அதிகம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-02-03 02:26 GMT
புதுடெல்லி,

இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

தங்கள் தரப்பில் உயிரிழப்பு எதும் இல்லை என முதலில் தெரிவித்து வந்த சீனா பின்னர் 2021 பிப்ரவரி மாதம் கல்வான் மோதல் குறித்த தகவலை வெளியிட்டது. அதில், கல்வான் மோதலில் 4 வீரர்கள் மரணமடைந்ததாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

ஆனால், சீனா தெரிவித்த தகவலில் சந்தேகம் உள்ளதாகவும், உண்மையான உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் எனவும் பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், கல்வான் மோதலில் சீனா வீரர்களின் உயிரிழப்பு அதிகம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் பிரபல புலனாய்வு செய்தி நிறுவனம் ’தி ஹலாக்சன்’ கல்வான் மோதல் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்லது.

இந்த புலனாய்வு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் கல்வான் மோதலில் சீன வீரர்கள் அதிக உயிரிழப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இந்திய வீரர்களுடனான மோதலின் போது சீன வீரர்கள் கடும் குளிர் நிறைந்த உறையும் நிலையில் இருந்த ஆற்றில் குதித்து தப்பிச்சென்றனர். 

அப்போது, பல சீன வீரர்கள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். 38 சீன வீரர்கள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம். ஆனால், ஒரே ஒரு வீரர் மட்டுமே ஆற்றை கடக்கும்போது உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இதன் மூலம் கல்வான் மோதலில் சீன தரப்பில் மொத்தம் 41 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என ‘தி ஹலாக்சன்’ புலனாய்வு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்