18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு
18 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துளளது.
புதுடெல்லி,
நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை 15 முதல் 18 வயது வரையிலான இளம்பருவத்தினருக்கு செலுத்துகிற பணியானது கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கியது. இந்தப் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை இந்த வயதினரில் 63 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விட்டனர்.
இது தொடர்பாக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் திடீர் அறிவுரை வழங்கி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
* 15 முதல் 18 வயது வரையிலானவர்களுகு கொரோனா தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்தி முடிப்பது மற்றும் அவர்களின் தடுப்பூசி நம்பிக்கையை நிலைநிறுத்துவது குறித்து அவர்களையும், அவர்களை பராமரிப்பவர்களையும் மையமாகக்கொண்ட ஒரு பொருத்தமான தகவல் தொடர்பு உத்தியை உருவாக்க வேண்டும்.
* கொரோனா தடுப்பூசி அட்டவணையை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பது முக்கியம்.
* இளம்பருவத்தினரிடையே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அதே நேரத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை எஞ்சிய பயனாளிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
* இளம்பருவத்தினரிடையே 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதை தினசரி மாநில அளவிலும், யூனியன் பிரதேச அளவிலும், மாவட்ட அளவிலும் மதிப்பாய்வு செய்வது அவசியம் ஆகும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.