பாஜக மாநிலங்களின் குரலை ஒடுக்க முடியும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது - ராகுல்காந்தி

ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நாட்டின் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்து கொள்ள நினைக்கிறது என மக்களவையில் ராகுல்காந்தி கூறினார்.

Update: 2022-02-02 15:26 GMT
புதுடெல்லி,

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி பேசியதாவது:-

நீதித்துறை, தேர்தல் ஆணையம் பெகாசஸ் அனைத்தும் மாநிலங்களின் குரலை அழிக்கும் கருவிகள்.நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தமிழகம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தாலும் நீங்களோ முடியாது, கெட் அவுட்  என சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள், தமிழகத்தின் குரலுக்கு செவிமடுக்கவே இல்லை. நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது.

இந்தியா, ஒரு ராஜ்ஜியம் அல்ல... ஒரு பேச்சு வார்த்தை ஒரு உரையாடல், ஒரு கூட்டாண்மை இங்கு மாநிலங்கள் தனித்தனியாக எப்போதும் ஆளப்படவில்லை.  நீங்கள் அரசியலமைப்பைப் படித்தால், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

மராட்டியம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், லட்சத்தீவுகளைச்சேர்ந்த சகோதரர்களை போலவே தமிழகத்தை சேர்ந்த சகோதரர்களுக்கும் அனைத்து உரிமையும் உண்டு. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதன் கண்ணியம், வரலாறு, கலாச்சாரம் உள்ளது. அதனை மதிக்க வேண்டும்.

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 55 கோடி மக்களை விட அதிகம் என்பதை ஏழை இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.  இந்நாட்டு மக்கள் எப்போதுமே அமைதியாக இருப்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய  இலக்கு பாகிஸ்தானையும் சீனாவையும் தனித்தனியாக வைத்திருப்பதுதான். நீங்கள் அவர்களை ஒன்றிணைத்தீர்கள்.  இதுதான் நீங்கள் இந்திய மக்களுக்கு எதிராக செய்த மிகப்பெரிய குற்றம்.

இந்தியா இன்று முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீனாவையும் பாகிஸ்தானையும் ஒன்று சேர்த்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நாட்டின் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்து கொள்ள நினைக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்பில் மட்டுமே இந்தியாவை நடத்த முடியும். பாஜக மாநிலங்களின் குரலை ஒடுக்க முடியும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்