ஜம்முவில் 541 பயங்கரவாத தாக்குதல் - நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல்
ஜம்மு காஷ்மீரில் சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த 541 பயங்கரவாத தாக்குதலில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் `சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதா?' என்பது தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் பதில் அளித்தார். அப்போது அவர் தெரிவித்த தகவலின்படி,
'ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட தினம் தொடங்கி தற்போது வரை, அதாவது 2019 ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 2022 ஜனவரி 26ம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 541 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து உள்ளது.
இந்த தாக்குதலின் போது 98 பொது மக்களும், 109 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்து உள்ளனர். இதே காலகட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 439 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த தாக்குதல்களில் பொது சொத்துக்கள் எதுவும் சேதப் படுத்தப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.