பட்ஜெட் மூலம் அதிக வளர்ச்சி, அதிக முதலீடு, அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் - பிரதமர் மோடி புகழாரம்
பட்ஜெட் மூலம் அதிக வளர்ச்சி, அதிக முதலீடு, அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “மிகவும் சிறப்பான பட்ஜெட்டை நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் பேரழிவின் மத்தியில் வளர்ச்சியின் புதிய நம்பிக்கையை தந்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட் ஊக்குவிக்கும். சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பல தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகள், ஏழைகள் மத்திய பட்ஜெட்டால் பயன்பெறுவர். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிக்கரையில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்பானது. விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை இந்த பட்ஜெட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பட்ஜெட் இது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பயனடைவார்கள்.
நாட்டிலேயே முதன்முறையாக, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு போன்ற பகுதிகளுக்கு 'பர்வத் மாலா' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மலைகளில் நவீன போக்குவரத்து மற்றும் இணைப்பு முறையை எளிதாக்கும். இது எல்லையோர கிராமங்களுக்கு வலு சேர்க்கும்” என்று பிரதமர் மோடி கூறினார்.