5 மாநில சட்டசபை தேர்தல்:வாகன பேரணி, பாதயாத்திரைக்கான தடை 11-ந்தேதி வரை நீட்டிப்பு
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் வாகன பேரணிகள், பாதயாத்திரை உள்ளிட்டவற்றுக்கான தடை வருகிற 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் வருகிற 10-ந்தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு உள்ளன.
ஆனால் நாடு முழுவதும் கொரோனாவின் 3-வது அலை பரவி வருவதால் இந்த பிரசாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்து உள்ளது.
இதில் முக்கியமாக வாகன பேரணிகள், பாதயாத்திரை, ரோடு ஷோக்கள், ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதைப்போல பிரசார பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடைகள் நேற்று வரை அமலில் இருந்த நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தலைமையில் தேர்தல் கமிஷனர்கள் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினர். இதில் தேர்தல் கமிஷனர்கள் ராஜீவ் குமார், அனூப் சந்திரா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் வாகன பேரணிகள், பாதயாத்திரை, ரோடு ஷோக்கள், ஊர்வலங்களுக்கான தடையை வருகிற 11-ந்தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
எனினும் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் திறந்தவெளி பிரசார பொதுக்கூட்டங்களில் 1000 பேர் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 50 சதவீதம் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதைப்போல வீடு வீடாக வாக்கு சேகரிப்பதற்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கு பதிலாக 20 பேர் வரை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.