திட்டமிட்டபடி 5 மாநில தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா தகவல்

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-30 11:49 GMT
புதுடெல்லி,

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியதாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் மிகக் குறைவாக 4 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் உறுதியாகியுள்ளதாகவும், அவர்களில் 3 பேர் குணமடைந்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார். 

80 வயதிற்கு மேற்பட்டவர்கள், கொரோனா நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளை அளிக்கலாம் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேரணிகள், பொதுக்கூட்டங்களை தடை செய்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்