அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு ஆபத்து என்னை காப்பாத்துங்க போலீசில் புகார்...!

கடவுளின் அவதாரம் என்றுகூறி வந்த அன்னபூரணி அரசு அம்மா, இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.;

Update: 2021-12-29 11:26 GMT
சென்னை

 ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி கொள்ளும் பெண்ணின் வீடியோ காட்சிகள் மற்றும் அவரை பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. "ஆதிபராசக்தி அம்மா" என்று அழைக்கப்படும் அந்த பெண்மணி அலங்கார இருக்கையில் அமர்ந்தவாறு அருள் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. 

செங்கல்பட்டு அருகே நேரு நகர் திருப்போரூர் கூட்டு ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி திடீர் அம்மன் அன்னப்பூரணி அருள்வாக்கு சொல்ல இருப்பதாக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்காக வாசுகி திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அனுமதி பெற்றிருந்த நிலையில் காவல்துறை சார்பில் தற்போது அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் அன்னப்பூரணி அம்மா கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று  வெளியாகி அவர் போலி சாமியார் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இந்நிலையில் அன்னப்பூரணி அரசு அம்மா, சென்னை போலீஸ் கமிஷனர்  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கு மொபைல் போன் மூலமாகவும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், இதனால் தனக்கும், தன் பக்தர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, தன்னை ஆன்மிக பணியில் ஈடுபடக் கூடாது என தொடர்ந்து சிலர் மிரட்டி வருவதாகவும், தொடர்ந்து வரும் மிரட்டல்கள் காரணமாக, தனது ஆன்மிக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, உடனடியாக தனக்கும், தனது பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்து உள்ளார்.

பின்னர் பேட்டி அளித்த அவர் நான் கடவுளின் அவதாரம் என யாரிடமும் கூறவில்லை; ஆன்மீக தீட்சை மட்டுமே அளித்து வருகிறேன். நேரம் வரும் போது என்னை அறிந்து கொள்வீர்கள் என கூறினார்.

மேலும் செய்திகள்