சண்டிகார் மாநகராட்சி தேர்தல்; ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி
சண்டிகார் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி வெற்றிபெற்றது.;
சண்டிகார்,
யூனியன் பிரதேசமான சண்டிகார், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கான பொது தலைநகராக விளங்குகிறது. இங்குள்ள சண்டிகார் மாநகராட்சி பாரம்பரியமானது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 26 இடங்களில் 20 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. மேயர் பதவியை கைப்பற்றியது. இங்கு கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க.வின் ரவிகாந்த் சர்மா மேயராக இருந்தார்.
சண்டிகார் மாநகராட்சி வார்டுகள் 35 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி களம் கண்டது. பா.ஜ.க.வும், காங்கிரசும் போட்டியிட்டது.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று 9 இடங்களில் எண்ணப்பட்டன. இதில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சியின் வேட்பாளர்கள் 14 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக பா.ஜ.க. 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், சிரோன்மணி அகாலிதளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
மேயர் பொறுப்பு வகித்த பா.ஜ.க.வின் ரவிகாந்த் சர்மா ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் தமன்பிரீத் சிங்கிடம் 828 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதேபோல் பல முக்கிய பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.