அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவோடு பாரதியாரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும்: புதுச்சேரி கவர்னர்

அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவோடு பாரதியாரின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாட வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.;

Update: 2021-12-26 20:07 GMT
ஆலோசனை கூட்டம்

புதுச்சேரியில் ஜனவரி மாதம் தேசிய இளைஞர் விழாவை கொண்டாடுவது தொடர்பான காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மத்திய இளைஞர் விவகாரங்கள் துறை மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்குர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் உஷா ஷர்மா, இணை செயலாளர் நிதிஷ்குமார் மிஸ்ரா, துணை செயலாளர் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மத்திய மந்திரி நம்பிக்கை

தேசிய இளைஞர் விழாவினை நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டங்களோடு சேர்த்து கொண்டாடுவது, பிரதமரின் அறிவுறுத்தல்படி மகான் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை இணைத்து கொண்டாடுவது, தேசிய இளைஞர் விழாவிற்கான நிதியாதாரங்களை திரட்டுவது ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

விழாவினை சிறப்பாக நடத்த புதுச்சேரி அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டிய மத்திய மந்திரி ஏற்பாடுகள் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

பாரதியார் நூற்றாண்டு

தேசிய இளைஞர் விழாவை நடத்த புதுச்சேரியை தேர்வு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரவிந்தரின் 150-வது பிறந்த ஆண்டை கொண்டாடுகிற, அதே வேளையில் அவரது நெருங்கிய நண்பர் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவையும் சேர்த்து கொண்டாட வேண்டும்.

தென்னிந்திய மாநிலங்கள் தேசிய இளைஞர் விழாவில் ஆர்வத்தோடு பங்கெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஜனவரி 5-ந்தேதிக்குள் தேசிய இளைஞர் விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்து முடிக்கப்படும். அனைவரின் கூட்டு முயற்சியோடு தேசிய இளைஞர் விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கான முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்