இந்தியாவில் ‘பூஸ்டர்’ டோஸ் குறித்து மத்திய அரசின் அறிவியல் குழுக்கள் ஆலோசனை

கொரோனாவை கட்டுப்படுத்த ‘பூஸ்டர்’ டோஸ் செலுத்துவது தொடர்பாக மத்திய அரசின் அறிவியல் குழுக்கள் ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.;

Update: 2021-12-24 23:00 GMT
புதுடெல்லி, 

கொரோனா தடுப்பூசி செலுத்துதலுக்கான தேசிய நிபுணர் குழுவும், தடுப்பூசி போடும் பணிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும், கொரோனாவுக்கு எதிரான ‘பூஸ்டர்’ டோசை செலுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றன என்று சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிராக ‘பூஸ்டர்’ டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக, தடுப்பூசி செலுத்துதலுக்கான நிபுணர் குழுக்களால் அலசி ஆராயப்பட்டு, இறுதியாக பரிந்துரைகள் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, அந்த அமைச்சகத்தால் ஏற்கப்படும்.

தற்போது, இது தொடர்பாக நிபுணர் குழுக்கள் ஆலோசித்து வருகின்றன. இதுதொடர்பாக நம் நாட்டில் இருந்தும், உலகம் முழுவதிலும் இருந்து அறிவியல்பூர்வ தகவல்களை பெற்று ஆராய்ந்து வருகிறோம். அதன் அடிப்படையில் நாங்கள் எங்கள் கொள்கையை உருவாக்குவோம்’ என்றார்.

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், ‘பூஸ்டர் டோஸ் செலுத்துவதன் அவசியம், அதற்கான காலம் குறித்தும், குறைந்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்கும்’ என்று கூறினார்.

மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியீசசின் கருத்தை மேற்கோள் காட்டிய ராஜேஷ் பூஷன், ‘கொரோனா தொடர்பான எந்த முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்காமல் திட்டமிட்டபடி கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான ‘டிக்கெட்’ ஆக பூஸ்டரை கருத முடியாது’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்