விஜயாப்புரா-மராட்டியம் இடையே 111 பஸ்கள் சேவை நிறுத்தம்
விஜயாப்புரா-மராட்டியம் இடையே 111 பஸ்கள் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
விஜயாப்புரா,
பெலகாவி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக கர்நாடகம்-மராட்டியம் இடையே பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் சத்ரபதி சிவாஜி சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, பெலகாவியில் எம்.இ.எஸ். அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அரசு வாகனங்கள், போலீஸ் ஜீப்புகள் மீது கல்வீசி தாக்கப்பட்டது.
இதுதவிர மராட்டியத்திலும் கர்நாடக அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. இந்த நிலையில் விஜயாப்புராவில் இருந்து மும்பை, புனே, தானே, சோலாப்பூர், கோலாப்பூர் உள்பட மராட்டியத்தின் சில பகுதிகளுக்கு வடகிழக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 111 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் மராட்டியத்தில் கர்நாடக அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்படுவதால் விஜயாப்புராவில் இருந்து மராட்டியத்திற்கு இயக்கப்படும் 111 பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.