பஞ்சாபில் அராஜகத்தை பரப்ப தேச விரோத சக்திகள் முயற்சி - முதல் மந்திரி குற்றச்சாட்டு

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2021-12-23 16:06 GMT
சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில்  ஒருவர் பலியானார், 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.அவருடன் மாநில துணை முதல்-மந்திரி மற்றும் பிற மந்திரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, 

“சில தேச விரோத சக்திகள் மாநிலத்தில் அராஜகத்தை பரப்ப முயற்சி செய்கின்றனர்.தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சில தேசவிரோத சக்திகளும், மாநில விரோத சக்திகளும் இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபட முயற்சிக்கின்றன. அந்த சக்திகளை தடுக்க மாநில அரசு கவனமுடன் உள்ளது. பொதுமக்களும் கவனமாக இருக்கவேண்டும். 

முன்னதாக புனிதத்தளங்களையும், பொருட்களையும் அவமதிக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அவை தோல்வியடைந்தன. தற்போது குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

எத்தகைய விலை கொடுத்தாயினும் அமைதி நிலைநாட்டப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட நமது போலீசாருக்கு முழு திறன் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை சீராக உள்ளது” என்றார். 

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து லூதியானா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்