சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு
கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து, இங்கிருந்து திருப்பதிக்கு கார் மூலம் சென்ற 39- வயது பெண் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.;
அமராவதி,
உலகமெங்கும் பயணித்து வருகிற ஒமைக்ரான், வைரஸ் நமது நாட்டில் கடந்த 2-ந்தேதி அடியெடுத்து வைத்தது.இந்த 20 நாளில் இந்தியாவில் 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒமைக்ரான் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலையடுத்து விமான நிலையங்களில் சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கு பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து, இங்கிருந்து திருப்பதிக்கு கார் மூலம் சென்ற 39- வயது பெண் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 10 ஆம் தேதி வந்த 39-வயது பெண்ணுக்கு திருப்பதியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மரபணு வரிசை பரிசோதனைக்கு அவரின் மாதிரிகள் அனுப்பப்பட்டது. இதில் ஒமைக்ரான் பாதித்து இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக ஆந்திர பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
39-வயது பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆந்திராவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 45 சர்வதேச பயணிகளின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி இருப்பதாகவும் ஆந்திர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.