பீகார்: போலி ஆவணம் மூலம் ரெயில் என்ஜினை விற்ற ரெயில்வே என்ஜினீயர்...
ரெயில்வே துறையில் பணியாற்றி வரும் என்ஜினீயர் ஒருவர் போலி ஆவணம் தயார் செய்து ரெயில் என்ஜினை விற்ற சம்பவம் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரெயில்வே கோட்டத்தில் லோகோ டீசல் ஷெட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருபவர் ராஜீவ் ரஞ்சன். சமஸ்திபூர் கோட்டத்தில் உள்ள புர்னியா கோர்ட் ரெயில் நிலையத்தில் பழமையான நீராவி ரெயில் என்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த 14-ந்தேதி அந்த ரெயில் என்ஜினை போலி ஆவணங்கள் தயார் செய்து இரும்பு வியாபாரி ஒருவருக்கு என்ஜினீயர் ராஜீவ் ரஞ்சன் விற்பனை செய்தது உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவத்தன்று புர்னியா கோர்ட் ரெயில் நிலைய பொறுப்பாளர் ரகுமான், பழமையான நீராவி ரெயில் என்ஜினை என்ஜினீயர் ராஜீவ் ரஞ்சன் இரும்பு அறுக்கும் கருவியை பயன்படுத்தி உடைத்து கொண்டிருப்பதை பார்த்தார். ரெயில் என்ஜினை உடைப்பதை நிறுத்தும்படி ரகுமான் கூறிய போது, என்ஜினை உடைத்து டீசல் பழைய ஷெட்டுக்கு அனுப்பும் உத்தரவின் ஆவணத்தை ராஜீவ் ரஞ்சன் காட்டி உள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த ரகுமான் தனது துறைக்கு சென்று ரெயில் என்ஜினை உடைக்க ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்த போது அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரியவந்தது. மேலும் ராஜீவ் ரஞ்சன் போலி ஆவணத்தை காட்டியதையும் உறுதி செய்தார். இதை அறிந்த ராஜீவ் ரஞ்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 6 பேர் தலைமறைவானார்கள்.
இதையடுத்து என்ஜினீயர் ராஜீவ் ரஞ்சன் உள்பட 7 பேர் மீது ரெயில் என்ஜினை மோசடி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 7 பேர் மீதும் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். மேலும் என்ஜினீயர் ராஜீவ் ரஞ்சனை ரெயில்வே நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.