மேற்கு ரெயில்வேயில் 468 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி
மேற்கு ரெயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளில் 468 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி செய்யப்பட்டுள்ளது.;
மும்பை,
ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வை-பை வசதி அறிமுகம் செய்யப்பட்டது. மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் முதல் முறையாக 2016-ம் ஆண்டு மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இலவச வை-பை சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக மேற்கு ரெயில்வே ரெயில் நிலையங்களில் வை-பை வசதி விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை மேற்கு ரெயில்வேயில் 468 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பை மண்டலத்தில் மட்டும் 90 ரெயில் நிலையங்கள் உள்ளன.
இதுகுறித்து மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்குர் கூறுகையில், "ரெயில் நிலையங்களில் வை-பை வசதி பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே மேலும் பல ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக இந்த சேவையை அறிமுகம் செய்ய உள்ளோம். நாடு முழுவதும் சுமார் 6 ஆயிரத்து 70 ரெயில் நிலையங்களில் வை-பை சேவை வசதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.