ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவக்குழு நியமிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவக்குழு நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-12-20 18:54 GMT
புதுடெல்லி,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு சார்பில் இணையதளத்தில் நேற்று பதிவேற்றப்பட்டது.

அந்த உத்தரவில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவக்குழுவை நியமிப்பது சரியாகவும், பொருத்தமாகவும் இருக்கும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான நிபுணர்களை கொண்ட மருத்துவக்குழுவை டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு நியமிக்கப்படும் மருத்துவக்குழுவிடம் ஆணையத்தின் மொத்த விசாரணை ஆவணங்களையும் அளிக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் இந்த டாக்டர்கள் பங்கேற்க வேண்டும். விசாரணையில் பங்கேற்று அதற்கான அறிக்கையை ஆணையத்திடமும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடமும், சசிகலாவிடமும் மருத்துவ குழு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்