அமேதி தொகுதியுடனான உறவு ஒருபோதும் முறியாது - ராகுல் காந்தி
அமேதி தொகுதியுடனான தனது குடும்பத்தின் உறவு ஒருபோதும் முறிந்து போகாது என்று ராகுல் காந்தி உருக்கமுடன் கூறினார்.;
அமேதி தொகுதி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பா.ஜ.க.வின் சார்பில் களம் இறக்கப்பட்ட ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
2-வது முறையாக சென்றார்
அதன் பின்னர் ஒரு முறைதான் அவர் அங்கு சென்றுள்ளார். இரண்டாவது முறையாக அவர் அங்கு சென்றார். அவர் தனது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் ஜெகதீஷ்பூரில் இருந்து ஹரிமாவ் வரை பாதயாத்திரை சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், சீனாவின் ஊடுறுவல்கள், வேளாண் சட்டங்கள் போன்ற விவகாரங்களை எழுப்பினார்.
உருக்கம்
அப்போது அவர் தனது அமேதி தொகுதி பற்றி உருக்கமுடன் குறிப்பிடத்தவறவில்லை. அவர், “அமேதி தொகுதியைப் பொறுத்தமட்டில் எங்கள் குடும்பத்துக்கு உறவு உண்டு. இந்த உறவு ஒருபோதும் முறிந்து போகாது” என உருக்கமுடன் குறிப்பிட்டார்.
மேலும், “2004-ம் ஆண்டு நான் இங்கு வந்தபோது நீங்கள் என்னை பார்க்க வந்தீர்கள். எனக்கு நேசிக்க கற்றுத்தந்தீர்கள். நீங்கள்தான் அரசியலையும் எனக்கு சொல்லித்தந்தீர்கள். ஒன்றிணைந்து இருப்பதற்கான வழியையும் எனக்கு காட்டினீர்கள்” எனவும் குறிப்பிட்டார்.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியும், தாயார் சோனியா காந்தியும் எம்.பி.யாக இருந்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.