டெல்லி நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு; டிஆர்டிஓ விஞ்ஞானி கைது
எளிதாக கிடைக்கக் கூடிய அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தி வெடிபொருள் தயாரிக்கப்பட்டதாகவும் டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.;
புது டெல்லி:
கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள ரோகினி மாவட்ட நீதிமன்றத்தில், சக்தி குறைந்த குண்டு வெடித்தது. நீதிமன்ற அறை 102-ல் நடந்த இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய பாரத் பூஷண் கட்டாரியா என்பவரை நேற்று கைது செய்துள்ளனர். இவர் டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு)மூத்த விஞ்ஞானியாவார்.
தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் வழக்கறிஞர் ஒருவரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு, சிறிய ரக வெடிகுண்டு ஒன்றை அவர் சிறிய பெட்டியில் வைத்து வெடிக்கச் செய்துள்ளார். ஒரே கட்டடத்தில் வசித்து வரும் வழக்கறிஞர், கட்டாரியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்துள்ளது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஏராளமான வழக்குகளைக் கொடுத்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எளிதாக கிடைக்கக் கூடிய அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தி வெடிபொருள் தயாரிக்கப்பட்டதாகவும் டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.