நாடாளுமன்ற இரு அவைகளும் டிசம்பர் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற இரு அவைகளும் டிசம்பர் 20ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இரு அவைகளிலும் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை ராஜிநாமா செய்யக் கோரி அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாள் முழுவதும் அவைகள் செயல்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று காலை அவைகள் கூடியதிலிருந்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவை திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலிலும் எதிர்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி தொடர்ந்ததால் மக்களவையும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.