காசிப்பூர் எல்லையில் விரைவில் போக்குவரத்து தொடங்கும் - அதிகாரிகள் தகவல்
டெல்லி காசிப்பூர் எல்லையில் இருந்து விவசாயிகள் அனைவரும் வெளியேறியதை தொடர்ந்து, சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற்றதுடன், விவசாயிகளின் பிற கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதற்கான உறுதியையும் வழங்கியது. இதனால் போராட்டத்தை முடித்துக்கொண்டு டெல்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் வீடு திரும்பினர்.
அந்தவகையில் காசிப்பூர் எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகளின் கடைசி குழுவும் நேற்று வீடு திரும்பியது. அங்கு போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வந்த பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்தும், இந்த குழுவுடன் தனது சொந்த ஊர் திரும்பினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் சும்போது, ‘இன்றுநான் மிகவும் உணர்ச்சிவசமாக உள்ளேன். கடந்த 13 மாதங்களாக இந்த இடம்தான் எங்களுக்கு வீடாகி இருந்தது. விவசாயிகளின் உரிமைகளுக்கான இந்த இயக்கம் ஒருபோதும் நின்றுவிடாது. இங்கேயும் போராட்டத்தை நாங்கள் தற்காலிகமாகவே நிறுத்தியுள்ளோம். எங்களுக்கு அளித்த உறுதிமொழிப்படி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் இயற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று கூறினார்.
விவசாயிகள் அனைவரும் வீடு திரும்பியதை தொடர்ந்து காசிப்பூர் எல்லையில் சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு விரைவில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.