தேர்தல் நெருங்கும் போது பாஜக மதக்கண்ணாடி அணிந்துகொள்ளும் - அகிலேஷ்
தேர்தல் நெருங்கும் போது பாஜக மதக்கண்ணாடி அணிந்து கொண்டு அனைத்தையும் மத ரீதியிலேயே பார்க்கும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ், தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக மதக்கண்ணாடி அணிந்து கொண்டு அனைத்தையும் மத ரீதியிலேயே பார்க்கும். லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் உள்துறை இணைமந்திரி அஜய் மிஸ்ராவை பாஜக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்றார்.
லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம், விவசாயிகளை கொல்ல திட்டமிட்ட சதி என சிறப்பு விசாரணைக்குக் குழு தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் லகிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மத்திய மந்திரி மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம், விவசாயிகளை கொல்ல திட்டமிட்ட சதி என சிறப்பு விசாரணைக்குக் குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.