இந்தியாவில் 48 நாட்களாக 15 ஆயிரத்துக்கும் குறைவாக கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் நேற்று முன்தினத்தை காட்டிலும் நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு 20.7 சதவீதம் அதிகரித்துள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் தொடர்ந்து 48 நாட்களாக கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 10 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது. 87,562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 0.25 சதவீதத்தினர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவிலிருந்து மீண்டு வருவோர் சதவீதம் உயர்ந்து 98.38 ஆக உள்ளது.
நாட்டில் நேற்று முன்தினத்தை காட்டிலும் நேற்றைய கொரோனா பாதிப்பு 20.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதிதாக மராட்டியத்தில் 8 பேரும் டெல்லியில் 4 பேரும் ஒமைக்ரான் தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி கொரோனா பரவல் விகிதம் 0.59 சதவீதமாக ஆக உள்ளது. இது கடந்த 72 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, வாராந்திர கொரோனா பரவல் விகிதம் 0.67 சதவீதமாக உள்ளது. இது கடந்த 31 நாட்களாக 1 சதவீதத்துக்கும் குறைவாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.37 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பலியான 247 கொரோனா நோயாளிகளில் 174 பேர் கேரளாவிலும், 24 பேர் மராட்டியத்திலும் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 76 ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 134 கோடியே 61 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது.அதேபோல, கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதியன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முதன்முறையாக 1 கோடியை தாண்டியது.
மேலும், இந்த ஆண்டு மே 4ம் தேதி 2 கோடி எண்ணிக்கையையும், கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.