மணிப்பூரில் குண்டுவெடிப்பு - பயங்கரவாத தாக்குதலா? பாதுகாப்பு படையினர் குவிப்பு
மணிப்பூரில் இன்று அதிகாலை ஐஇடி குண்டு வெடித்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இம்பால்,
மணிப்பூர் மாநிலம் தலைநகர் இம்பாலின் லாம்லாங் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து பாதுகாப்புபடையினர் குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதியில் குவிக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் ஐஇடி குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் பாதுகாப்பு படையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, அம்மாநிலத்தின் சூராசந்த்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி, அவரது குடும்பத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் என 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் மாநிலத்தில் குகி என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலும், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தல் செய்யும் கும்பலும் மணிப்பூரில் செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மணிப்பூரில் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
தற்போது நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திலும் இந்த கும்பல்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.