இந்தியாவில் அகதிகள் அந்தஸ்து அல்லது எங்கள் நாட்டுக்கு அனுப்புக - அசாம் கோர்ட்டில் ரோஹிங்யாக்கள் மனு

7 ஆண்டுகளாக சிறையில் உள்ள ரோஹிங்யா அகதிகள் தங்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்க வேண்டும் என அசாம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-12-15 06:46 GMT
கவுகாத்தி,

மியான்மரில் வசித்துவந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ரோஹிங்யாக்கள் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் மியான்மரில் இருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் தஞ்சமடைந்தனர்.

வங்காளதேசத்தில் இருந்து அசாம், மேற்குவங்காளம் எல்லை வழியாக ஆயிரக்கணக்கான ரோஹிங்யா மக்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், 2014-ம் ஆண்டு மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக 10 ரோஹிங்யா அகதிகள் இந்தியா எல்லைக்குள் ஊடுருவினர். அவர்களை அசாம் எல்லையில் இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் ஊடுருவிய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கவுகாத்தி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து ரோஹிங்யாக்கள் 10 பேரும் அசாமில் உள்ள டெஸ்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள ரோஹிங்கியாக்கள் 10 பேரும் தங்களுக்கு இந்தியாவில் அகதிகள் அந்தஸ்து வழங்க வேண்டும் அல்லது தங்களை சொந்த நாடான மியான்மருக்கே அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து கவுகாத்தி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தியாவில் அகதிகள் அந்தஸ்து வழங்கக்கோரி ரோஹிங்கியாக்கள் தாக்கல் செய்த இந்த மனு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.  

மேலும் செய்திகள்