மும்பையில் 20 மாதங்களுக்கு பிறகு 7-ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு

20 மாதங்களுக்கு பிறகு மும்பையில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

Update: 2021-12-15 00:23 GMT
மும்பை,

மராட்டியத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நகர்பகுதிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், ஊரகப்பகுதிகளில் 5 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் நகர்பகுதிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலும், ஊரகப்பகுதிகளில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த போதும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மும்பை உள்ளிட்ட சில பகுதிகளில் தொடக்க பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று முதல் மும்பையில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“மாநில அரசு செப்டம்பர் 24-ந் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையின் படி, மும்பை மாநகராட்சி பகுதியில் அக்டோபர் 4-ந் தேதி முதல் 8 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல மாநில அரசு கடந்த மாதம் 29-ந் தேதி பிறப்பித்த உத்தரவை அடுத்து, மும்பையில் இன்று (புதன்கிழமை) முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது. 

இதுதொடர்பாக கூடுதல் அறிவுறுத்தல்களும் கடந்த 8-ந் தேதி பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் இன்று முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மும்பையில் சுமார் 20 மாதங்களுக்கு பிறகு இன்று தொடக்க பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்