இந்தோனேசியா நிலநடுக்கம் எதிரொலி; புதுச்சேரியிலும் விடப்பட்ட எச்சரிக்கை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கையின் எதிரொலியாக புதுச்சேரியிலும் எச்சரிக்கை விடப்பட்டது.;
புதுச்சேரி,
இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மவுமரேவில் இருந்து 95 கிமீ வடக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் எதிரொலியாக மக்கள் அச்சத்தில் உறைந்தனர். வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் இருந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி கடற்கரையில் இருந்தவர்களை வீடு திரும்புமாறு போலீசார் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்தனர். காற்று வேகமாக வீசுவதால், சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என புதுச்சேரி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.