நான் தலைவன் அல்ல... எனக்கு அரசியல் செய்ய தெரியாது - அரவிந்த் கெஜ்ரிவால்
நான் தலைவன் அல்ல... எனக்கு அரசியல் செய்ய தெரியாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டேராடூன்,
70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன.
ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், உத்தரகாண்டில் உள்ள காசிபூர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.
பேரணி நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், நான் தலைவன் அல்ல... எனக்கு அரசியல் செய்ய தெரியாது. எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்களுக்கு தெரியும். டெல்லியில் மக்களுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகளை கொடுத்துள்ளோம். உங்களுக்கு இங்கேயும் வேலைவாய்ப்புகளை நாங்கள் கொடுக்கிறோம். மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்குவோம்’ என்றார்.