பல்கலைக்கழக மானியக்குழு பெயரில் சமூகவலைதளங்களில் வெளியான அறிக்கை- 'போலி' என அதிகாரிகள் தகவல்
பல்கலைக்கழக மானியக் குழு பெயரில் சமூக வலைதளங்களில் இன்று ஒரு அறிக்கை வெளியானது.;
சென்னை,
கொரோனா தொற்றுக்கு மத்தியில் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், தேர்வும் அதேபோல் ஆன்லைனிலேயே நடந்தது. இந்தநிலையில் தற்போது நேரடி மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், தேர்வும் ஆப்லைன் முறையிலேயே(நேரடியாகவே) நடத்தப்படும் என்று தமிழக அரசின் உயர்கல்வித் துறை திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவித்து விட்டது.
இதையடுத்து சில கல்லூரி மாணவர்கள் ஆப்லைன் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டமும் நடத்தினார்கள். இருப்பினும், ஆப்லைன் மூலம் தேர்வு நடத்துவதற்கு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தயாராகி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு பெயரில் சமூக வலைதளங்களில் இன்று ஒரு அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், அனைத்து பல்கலைக்கழகங்கள் தற்போது மற்றும் எதிர்கால செமஸ்டர் தேர்வுகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆப்லைன் மூலம் நடத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும், அதற்கான தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இவ்வாறு வெளியான பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிக்கை போலியானது என அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் இணையதள பக்கத்துக்கு சென்று பார்த்தபோது, அதுபோன்ற அறிக்கை எதுவும் வெளியிடப்படாமலேயே இருந்தது.