கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காவிட்டால் 3-வது அலைக்கு வாய்ப்பு....! நிபுணர் எச்சரிக்கை

இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்று நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-12-11 23:12 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவு தணிந்து இருந்தாலும், புதிய வகை கொரோனா வைரசான ஒமைக்ரான், அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை நாட்டில் 33 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் நேற்று ஜிம்பாப்வே நாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. 

நாட்டில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 17 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து ராஜஸ்தானில் 9 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் ஒமைக்ரான் வகை கொரோனாவால் 3-வது அலை பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் ஒமைக்ரான் அந்த அளவுக்கு பரவாது, அச்சம்கொள்ளத் தேவையில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர். 

காரணம், கொரோனாவில் டெல்டா வகையைவிட ஒமைக்ரான் வகை, பரவல் தன்மையில் குறைந்தது என்றும், இந்தியர்களிடம் தடுப்பூசி காரணமாக நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கருத்தை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) முன்னாள் இயக்குனர் ராகேஷ் மிஸ்ராவும் உறுதிப்படுத்தி உள்ளார். 

மக்கள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டாலும் அது லேசாகத்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டால் ஒமைக்ரானாக இல்லாவிட்டாலும் வேறுவிதத்தில் 3-வது அலை வரக்கூடும் எனவும் அவர் எச்சரித்து இருக்கிறார். எதிர்கால கொரோனா அலைகளுக்கு இந்த மூன்றும்தான் தடுப்பு ஆயுதங்களாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்