எனது வேந்தர் பதவியையும் பறித்து கொள்ளுங்கள்; பினராயி விஜயனுக்கு, கேரளா கவர்னர் கடிதம்
கேரளாவில் பல்கலைக்கழக செயல்பாடுகளில் அரசியல் தலையீடு எல்லைமீறி விட்டதால், எனது வேந்தர் பதவியையும் பறித்து கொள்ளுங்கள் என்று கூறி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான் கடிதம் அனுப்பி உள்ளார்.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
முதல்-மந்திரிக்கு கடிதம்
கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த கோபிநாத் 60 வயது ஆனதையடுத்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால் பல்கலைக்கழக சட்டத்தை மீறி மீண்டும் அவரையே துணை வேந்தராக நியமிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான கோப்பில் கையெழுத்திட கேரள அரசு, கவர்னரை நிர்பந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கூறி கவர்னர் ஆரிப் முகம்மது கான் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
60 வயது ஆனபின்பும்
சமீபகாலமாக பல்கலைக்கழக செயல்பாடுகளில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. சட்டத்தை மீறி பல நியமனங்கள் நடை பெறுகின்றன. இதை ஏற்று கொள்ள முடியாது. பல்கலைக்கழக சட்டத்தின் படி 60 வயதுக்கு மேற்பட்டவரை துணை வேந்தராக நியமிக்க முடியாது. ஆனால் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற கோபிநாத் 60 வயது ஆன பின்னரும் மீண்டும் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலை கழக மானிய குழு சட்டத்தின்படி 60 வயது ஆனாலும் துணை வேந்தராக நியமிக்கலாம் என்று கேரள அரசு குறிப்பிடுகிறது. இதற்கு பல்கலைக்கழக சட்டத்திலும், பல்கலை கழக மானிய குழு சட்டத்திலும் முரண்பாடுகள் இருந்தால், பல்கலைக்கழக மானிய குழு சட்டத்தை பின்பற்றலாம் என்று அட்வகேட் ஜெனரல் பதிலளித்தார்.
நீங்களே எடுத்துக்கொள்ளலாம்
காலடி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரை நியமிக்க தீர்மானித்தபோது ஒரே ஒருவர் பெயர் மட்டும்தான் சிபாரிசு செய்யப்பட்டது. பல்கலைக்கழக மாநில குழுசட்டத்தின் படி குறைந்தது 3 பெயர்களை சிபாரிசு செய்ய வேண்டும். அதிலிருந்து ஒருவரைதான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அப்போது பல்கலைக்கழக சட்டத்தின்படி ஒருவரின் பெயரை மட்டும் சிபாரிசு செய்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது.
கண்ணூரில் பல்கலைக்கழக மானிய குழு சட்டத்தையும், காலடியில் பல்கலைகழக சட்டத்தையும் ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறுவது என்னால் அங்கீகரிக்க முடியாது.
இதேபோல் கேரள கலாமண்டலம் ஸ்ரீநாராயணகுரு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் சட்டத்தை மீறி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இது போல் பலகலைக்கழக செயல்பாடுகளில் அரசியல் தலையீடு இருப்பதை ஏற்று கொள்ள முடியாது. எனவே வேந்தர் பதவியை அவசர சட்டம் மூலம் நீங்களே (முதல்-மந்திரியே)எடுத்து கொள்ளலாம். அல்லது நானாகவே வேந்தர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடும் கண்டனம்
கவர்னரின் இந்த கடிதம் கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன், பா.ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துன்ளனர்.
இதற்கிடையே கவர்னரை சமாதானப்படுத்தும் முயற்சியில் மந்திரி பாலகோபால், தலைமை செயலாளர் ஜாய் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.