பிபின் ராவத் மகள்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உத்தரகாண்ட் முதல்-மந்திரி
பிபின் ராவத் மகள்களை உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
டேராடூன்,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள், 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் டெல்லி பிரார் சதுக்கத்தில் உள்ள தகன மேடையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
தகனம் செய்யப்பட்ட பிபின் ராவத் மற்றும் மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் அஸ்தி அவர்களின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரணியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் அஸ்தியை அவரது குடும்பத்தினர் தங்கள் சொந்த மாநிலமான உத்தரகாண்ட் கொண்டு சென்றனர். அம்மாநிலத்தின் ஹரித்வார் கொண்டு செல்லப்பட்ட இருவரின் அஸ்தி இன்று கங்கை நதியில் கரைக்கப்பட்டது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் - மனைவி மதுலிகா ராவத் அஸ்தியை அவர்களது மகள்கள் கிருத்திகா மற்றும் தாரணி இருவரும் இணைந்து ஹரித்வாரா ஹட் பகுதியில் பாய்ந்தோடிய கங்கை நதியில் கரைத்தனர்.
இந்நிலையில், பிபின் ராவத் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரணியை உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி இன்று நேரில் சந்தித்தார். ஹட் பகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பெற்றோரை இழந்த கிருத்திகா மற்றும் தாரணிக்கு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி ஆறுதல் கூறினார்.