குட்கா மென்று துப்பி போலீஸ் நிலையத்தை அசுத்தப்படுத்திய போலீசார் - எச்சரித்தும் கேட்காததால் பாய்ந்த நடவடிக்கை

குட்காவை மென்று துப்பி போலீஸ் நிலையத்தை அசுத்தப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Update: 2021-12-11 06:57 GMT
போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ஷாதுல் மாவட்டம் கோக்புரா தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசாரில் 4 பேர் புகையிலை, குட்கா மெல்லும் பழக்கம் கொண்டுள்ளனர்.

4 போலீசாரும் போலீஸ் நிலையத்திலேயே புகையிலை, குட்கா மென்று அங்கேயே எச்சிலை துப்பி வந்துள்ளனர். புகையிலை, குட்கா மென்று துப்பியதால் போலீஸ் நிலையம் முழுவதும் அசுத்தமாக காட்சியளித்தது. 

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட எஸ்.பி. கோக்புரா போலீஸ் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, போலீஸ் நிலையம் குட்கா எச்சிலால் மிகுந்த அசுத்தமாக காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக, போலீசாரை எஸ்.பி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், எஸ்.பி. எச்சரித்தும் போலீசார் 4 பேரும் தொடர்ந்து குட்கா மென்று எச்சிலை போலீஸ் நிலையத்தில் துப்பியுள்ளனர். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் பரவின. இதனை தொடர்ந்து குட்கா மென்று துப்பி போலீஸ் நிலையத்தை அசுத்தப்படுத்திய 4 போலீசாரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்