கேரளாவில் 8 மாதங்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு விகிதம் 6 % கீழ் குறைந்தது
கேரளாவில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு விகிதம் 6 சதவிகிதம் குறைந்துள்ளது.
திருவனந்தபுரம்,
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த போதும் கேரளாவில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்பட்டது. நாட்டில் ஏற்படும் மொத்த பாதிப்பில் சரிபாதி கேரளாவில் மட்டும் பதிவாகி வருகிறது. எனினும், கடந்த சில வாரங்களாக கேரளாவில் மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
அந்த வகையில், கேரளாவில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு விகிதம் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,788- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 3,972- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு விகிதம் 5.94-சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தற்போதுதான் தொற்று பாதிப்பு விகிதம் 6 சதவீதத்திற்கும் கீழ் வந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4,836-பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 39,341 ஆக உள்ளது.