ஹெலிகாப்டர் விபத்து: பிபின் ராவத், மதுலிகா ராவத் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், மதுலிகா ராவத் உடல்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்,பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.;
புதுடெல்லி,
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் இறுதி அஞ்சலிக்காக டெல்லி காமராஜ் பாக்கில் வைக்கப்பட்டுள்ளது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத்தின் உடல்களுக்கு அவர்களது மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு உள்துறை மந்திரி அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல்காந்தி, உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், எம்.பி சுப்ரியா சூலே,
திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் முன்னாள் மந்திரி, ஏகே ஆண்டனி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மதியம் இரண்டு மணிக்கு பிபின் ராவத்தின் இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, டெல்லி கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பரார் சதுக்கத்தை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா உடல்கள் அவர்களது குடும்பத்தினரின் விருப்பப்படி தகனம் செய்யப்படும் என அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இறுதி மரியாதை மற்றும் இறுதி சடங்குகள் 5மணி அளவில் முடிவடையும் எனத் தெரிகிறது.