டெல்லி: பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தன.
புதுடெல்லி,
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும், இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. வாகனங்கள் வரும் வழியெங்கும் பொதுமக்கள் கூடி நின்று மலர்களை தூவி இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில், பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து வீரர்களின் உடல்கள் தனி தனி ஆம்பூலன்ஸில் சூலூர் விமானப்படைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மூலம் வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதைத் தொடர்ந்து சூளூரில் இருந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களை சுமந்து கொண்டு புறப்பட்ட தனி விமானம் டெல்லி சென்றடைந்தது. டெல்லியில் உள்ள பாலம் விமானப்படைத் தளத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் ஆகியோரின் உடல்களை ராணுவ வீரர்கள் ராணுவ மரியாதையுடன் சுமந்து சென்றனர். ராணுவ வீரர்களின் உடலுக்கு அவர்களது உறவினர்கள் தற்போது இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.