புதுடெல்லி: விவசாயிகள் சங்கம் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம்
மத்திய அரசிடம் இருந்து வரைவு திட்டம் அளிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் சங்கம் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் உள்ள எல்லை யில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன.
விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும், போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வற்புறுத்தி வருகிறார்கள்.
போராட்டத்தை கைவிட்டு விவசாய அமைப்புகள் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்த விவசாய சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் குழு அமைத்து கடந்த சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
டெல்லியில் போராடும் விவசாய சங்கத்தலைவர் குல்வந்த் சிங் சந்து கூறுகையில், ‘நாங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது, இருப்பினும் இறுதி முடிவு புதன்கிழமை அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்பின் நிர்வாகிகள் நேற்று நடத்திய ஆலோசனைக்கு பின், விவசாய அமைப்பின் தலைவர் குர்நாம் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும்’ என்று அறிவித்தார்.
இந்த நிலையில், விவசாய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக மத்திய அரசு ஒரு வரைவு திட்டத்தை விவசாய சங்கங்களுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இந்த வரைவு திட்டம் குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் 5 பேர் கொண்ட குழு நேற்று ஆலோசனை நடத்தியது. அப்போது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு குழு அமைப்பது, வழக்குகளை வாபஸ் பெறுவது போன்ற கோரிக்கைகளில் மத்திய அரசின் பதில் குறித்து உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, சில திருத்தங்கள் செய்யுமாறும், கூடுதல் விளக்கம் கேட்டும் அந்த வரைவு திட்டத்தை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பினர்.
விவசாயிகள் சார்பில் திருப்பி அனுப்பப்பட்ட வரைவு திட்டத்தில் மத்திய அரசு மாற்றங்களை மேற்கொண்டு பதில் அளிக்கும் என்று விவசாயிகள் சங்கம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்த நிலையில், இன்று மதியம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விவசாய அமைப்பின் நிர்வாகிகள் மீண்டும் கூடி முடிவெடுக்க உள்ளனர். மத்திய அரசிடம் இருந்து மாற்றம் செய்யப்பட்ட வரைவு திட்டம் அளிக்கப்படும் பட்சத்தில் போராட்டம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு 2 நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.