கார்த்திகை பிரம்மோற்சவ விழா 7-வது நாள்: சூரிய, சந்திர பிரபை வாகன சேவை
திருச்சானூரில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகன சேவை நடந்தது.
திருமலை,
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான ேநற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் சூரிய பிரபை வாகனத்தில் வேணுகோபாலகிருஷ்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகனச் சேவையில் பெரிய ஜீயர், சி்ன்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி, பாஞ்சராத்ரா ஆகம பண்டிதர் சீனிவாச்சாரியார், அர்ச்சகர்கள் பாபுசுவாமி, சுபந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கார்த்திைக பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகனச் சேவையும், இரவு குதிரை வாகனச் சேவையும் நடக்கிறது.
திருப்பதியைச் சேர்ந்த பக்தர்கள் பொன்னாலசுதாகர், உதய் ஆகியோர் 100 டஜன் கண்ணாடி வளையல்கள், உண்டியல் மீது போர்த்தப்படும் துணியை காணிக்கையாக வழங்கினர். அதை, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மய்யா பெற்றுக்கொண்டார்.